.webp)
Colombo (News 1st) 2022 உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள்,செயலமர்வுகளுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.
பரீட்சைகள் நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
2022 க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாக வழங்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாணவர்களின் தேவை கருதி இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவிருந்து மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன குறிப்பிட்டார்.
கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.