முட்டை இறக்குமதி: பேக்கரி உரிமையாளர்கள் வரவேற்பு

வௌிநாட்டு முட்டைகளை மக்கள் நிராகரிப்பர்: அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நம்பிக்கை

by Bella Dalima 07-01-2023 | 4:42 PM

Colombo (News 1st) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை தொடர்பில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு உணவுப் பொருளின் தரம் தொடர்பிலும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய பரிசோதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு தொடர்பான பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்தார். 

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களமும் இது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டார். 

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு காலாவதி திகதி குறிப்பிடப்பட்டிருப்பது அவசியம் எனவும் உணவு பாதுகாப்பு தொடர்பான பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். 

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தும் போது காலாவதி திகதியை காட்சிப்படுத்துவது அவசியம் என அவர் கூறினார். 

எவ்வாறாயினும், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வது குறித்து தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு முன்கூட்டியே அறிவிப்பதற்கான தேவைப்பாடு காணப்படவில்லை எனவும் உணவு பாதுகாப்பு தொடர்பான பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்தார். 

தமக்கு அறிவிக்கப்படாவிட்டாலும், இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை பரிசோதிக்க தயார் நிலையில் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதனிடையே, வௌிநாட்டில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுமானால் குறுகிய காலத்திற்குள் நுகர்வோர் அதனை நிராகரிப்பார்கள் என தான் நம்புவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது. 

இதற்கு முன்னரும் இந்தியாவில் இருந்து முட்டை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில், அவற்றை தருவித்த அரச நிறுவனத்திற்கு  கோடிக்கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டதாக சங்கத்தின் செயலாளர் ரத்னசிறி அலஹகோன் தெரிவித்தார். 

அந்த முட்டைகளை சாதாரண நுகர்வோரும் பேக்கரி உரிமையாளர்களும் நிராகரித்ததாக அவர் கூறினார். 

 மேலும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 25 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என சிலர் தெரிவித்துள்ள நிலையில், அதனை 40 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய அனுமதிப்பது நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வௌிநாட்டில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுமானால், உள்நாட்டு முட்டைகளின் விலையை குறைப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை தாம் வரவேற்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. 

இந்தியாவிலிருந்து 5 மில்லியன் முட்டைகள் அடுத்த வார இறுதியில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது. 

இந்தியாவில் இருந்து மட்டுமின்றி எந்தவொரு நாட்டிலிருந்தும் முட்டையை தற்காலிகமாக இறக்குமதி செய்து பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தமது கோரிக்கை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டது. 

குறைந்தபட்சம் 35 ரூபாவிற்கேனும் முட்டைகளை வழங்க முடியுமானால் சிற்றுண்டி உற்பத்திகளை 10 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், முட்டை விலை குறைவடைவதைப் பொறுத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.