.webp)
இந்தியாவுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை முதல் அம்சமாக சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் விளையாடுகின்றது.
தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி புனேயில் 5 ஆம் திகதி நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சாதனைகளுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களைக் குவித்தது.
அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த பெத்தும் நிசங்க மற்றும் குசல் மென்டிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 80 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மென்டிஸ் 3 பௌன்டரிகள், 4 சிக்ஸ்ர்களுடன் 31 பந்துகளில் 52 ஓட்டங்களைக் குவித்தார்.
சரித் அசலங்க 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் அணித்தலைவர் தசுன் சானக்க 2 பௌன்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கலாக 22 பந்துகளில் 56 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன்போது 20 பந்துகளில் அரைச்சதமடித்த அவர் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் குறைந்த பந்துகளில் அரைச்சதமடித்த இலங்கை வீரராகப் பதிவானார்.
இதற்கு முன்பு இந்தப் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் முதலிடத்தை வகித்ததுடன் மஹேல 2007 ஆம் ஆண்டில் கென்யாவுக்கு எதிராகவும், சங்கக்கார இந்தியாவுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டிலும் 21 பந்துகளில் அரைச்சதமடித்துள்ளனர்.
கடின இலக்கான 207 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 9.1 ஓவரில் 57 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளையும் இழந்தது.
சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ஓட்டங்களையும், அக்ஷார் பட்டேல் 31 பந்துகளில் 65 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்காக கடுமையாகப் போராடினார்கள்.
எனினும், அது இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை அடைவதற்கு போதுமானதாக இருக்கவில்லை.
இந்திய அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினர்.
இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியதுடன் இதன் பிரகாரம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.
இதனால் 7 ஆம் திகதி ராஜ்கோட்டில் நடைபெறும் 3 ஆவது போட்டி தொடரை தீர்மானிக்கும் ஒன்றாய் மாறியுள்ளது.
இருபதுக்கு20 கிரிக்கெட்டில் ஆசிய சாம்பியனான இலங்கை அணி அதன் பிறகு இந்தியாவை எதிர்கொண்டுள்ள முதல் தொடர் இதுவாகும்.