பிரித்தானிய தூதரகத்திடம் அறிக்கை பெறுமாறு உத்தரவு

டயானா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்திடம் அறிக்கை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 05-01-2023 | 5:20 PM

Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்திடம் தேவையான அறிக்கையை விரைவாக பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பான மனு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

டயானா கமகேவின் பிறப்புச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியன போலியானவை எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

தூதரக அறிக்கை கிடைத்த பின்னர் இந்த வழக்கு தொடர்பான உத்தரவை பிறப்பிப்பது நீதிமன்றுக்கு இயலுமானது என குறிப்பிட்ட நீதவான், அதுவரை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடுவது பொருத்தமற்றது எனவும் தெரிவித்தார்.