மறைந்தது 'கறுப்பு முத்து'

கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே இவ்வுலகைவிட்டு பிரிந்தார்

by Rajalingam Thrisanno 30-12-2022 | 2:17 PM

பிரேசிலின் 'கறுப்பு முத்து' என வர்ணிக்கப்படும் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே தனது 82 ஆவது வயதில் நேற்று (29) காலமானார். பல ஆண்டுகளாக சிறுநீரகம் மற்றும் வயிற்று கோளாறுகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

கால்பந்தாட்ட விளையாட்டின் முடிசூடா மன்னராக திகழ்ந்த பேலே, அதிக தடவைகள் உலக சாம்பியன் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே வீரர் என்ற சிறப்பிற்குரியவராவார்.

கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக தடவைகள் சாம்பியனான அணி என்ற பெருமைக்குரிய பிரேசில் 5 தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை சூடியுள்ளதுடன், அவற்றில் 3 தடவைகள் சாம்பியன் அணியில் பேலே இடம்பிடித்துள்ளார்.

  1958, 1962, 1970 ஆம் ஆண்டுகளில் பிரேஸிலுக்கு கால்பந்தாட்ட உலக சாம்பியன் மகுடத்தை ஈட்டிக்கொடுத்த பெருமை பேலேவுக்கு உள்ளது.

இதன் காரணமாகவே பிரேசிலின் 'கறுப்பு முத்து' என்றும் கறுப்பின மக்களின் அடையாளம் எனவும் கால்பந்தாட்ட இரசிகர்களால் பேலே போற்றப்படுகின்றார்.

1940 ஒக்டோபர் 23 ஆம் திகதி பிரேஸிலின் சாவோபாலோவின் டிரெஸ் கொராகோயெஸ் என்ற இடத்தில் வறிய குடும்பத்தில் பிறந்த பேலேவுக்கு எடிசன் அரண்டெசு டொ நாசிமெண்டோ என அவரது பெற்றோர் பெயர் சூட்டினர். அவரது செல்லப்பெயர்தான் பேலே.     பேலேவுக்கு 4 வயதாகும் போது கால்பந்தாட்ட விளையாட்டின் மீது அவருக்கு மோகம் ஏற்பட்டதாகவும் காலுறையில் கடதாசியை திணித்து கால்பந்து போல் உருவாக்கி அதில் கால்பந்து விளையாடியதாகவும் அவரது வரலாறு கூறுகின்றது.

பேலேயின் தந்தையே அவருக்கு கால்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளதுடன் சிறு பராயத்திலேயே அபரிமிதமான ஆற்றலை வௌிப்படுத்திய பேலேவுக்கு 1953 ஆம் ஆண்டு தனது 13 ஆவது வயதில் பிரேஸிலின் தேசிய இளையோர் கால்பந்தாட்ட அணியில் இடம்கிடைத்தது.

வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பேலே அடுத்த 4 வருடங்கள் தொடர்ச்சியாக அதிசிறந்த இளம் வீரராக தெரிவாகி 1958 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடருக்கான பிரேஸில் குழாத்தில் வாய்ப்பு பெற்றார்.

1958 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் பிரேஸில் அணிக்காக உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் களமிறங்கிய பேலே தனது அபார ஆற்றலின் மூலம் முழு உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.

இறுதிப் போட்டியில் சுவீடனை 2-1 என வீழ்த்தி பிரேஸில் உலக சாம்பியன் ஆனதுடன் அதற்கு அளப்பரிய பங்கை பேலே ஆற்றியிருந்தார்.

தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் பிரேஸில் உலக சாம்பியன் மகுடத்தை சூடுவதற்கு பேலேவின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

மைதானத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பந்தை கொண்டு செல்லும் வல்லமை, களத்தில் இரண்டு - மூன்று வீரர்களை ஏமாற்றி பந்துடன் தந்திரமாக முன்னேறும் ஆற்றல், தலையாலும் மார்பாலும் தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தும் மந்திரம், எவ்வளவு தூரத்திலிருந்தும் குறி தவறாமல் பந்தை கோல் கம்பத்துக்குள் உதைக்கும் திறமை என்பவற்றால் இரசிகர்களை கிறங்கடித்த பெருமை பேலேவுக்கு உள்ளது.

அதன் காரணமாகவே 20 நூற்றாண்டின் அதி சிறந்த வீரரான அவருக்கு இன்றும் கோடிக்கணக்கான இரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள்.

1970 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் அபரிமிதமான திறமையை வௌிப்படுத்திய பேலே 4-1 எனும் கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி பிரேஸில் உலக சாம்பியனாக காரணகர்த்தவாக திகழ்ந்தார்.

அந்தப் போட்டியில் பேலே தலையால் முட்டி போட்ட கோல் தன் வாழ்நாளில் மறக்க முடியாத கோல் என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 1970 இல் லாகோஸில் பெலேவின் ஆட்டத்தை காண்பதற்காக அப்போது நைஜீரியாவில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருந்த இரண்டு குழுக்கள் 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்ததாக வரலாறு கூறுகின்றது.

1970 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்ட அரங்கிலிருந்து பேலே ஓய்வுபெற்றநாள் உலக கால்பந்தாட்ட இரசிகர்களுக்கே பெரும் சோகமாக இருந்தது.

என்றாலும், சாண்டோஸ் கழகத்துக்காக தொடர்ந்து விளையாடிய அவர் 1974 இல் அதிலிருந்து விடைபெற்றதுடன் அமெரிக்காவின் நியூயோர்க் கொஸ்மாஸ் கழகத்தில் இணைந்து அமெரிக்கர்களுக்கு தமது கால்பந்தாட்ட வித்தையை காண்பித்தார். இதன் மூலம் அமெரிக்காவில் கால்பந்தாட்டத்தை பிரபல்யப்படுத்திய பெருமையை பேலே பெற்றார்.

1978 ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்திலிருந்து பேலே முழுமையாக ஓய்வு பெற்றதுடன் அவரது ஓய்வு அறிவிப்பு நிகழ்ச்சியில் 25 நாடுகளைச் சேர்ந்த 761 பத்திரிகையாளர்களும் சில நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டு பிரியாவிடை அளித்தனர். பேலேவின் 22 ஆண்டு கால கால்பந்தாட்ட சரித்திரத்தில் அவர் மொத்தமாக 1282 கோல்களைப் போட்டுள்ளார். ஹெட்ரிக் கோலடிப்பதில் வல்லவராக உலக சாதனை படைத்துள்ள பேலே 92 போட்டிகளில் ஹெட்ரிக் கோலடித்துள்ளார்.

1970 ஆம் ஆண்டுகளில் பிரேஸிலின் தேசிய புதையலாக அறிவிக்கப்பட்ட பேலே 20 ஆம் நூற்றாண்டு முடிய 20 ஆண்டுகள் இருக்கும் போதே அந்த நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரராக சர்வதேச ஒலிம்பிக் குழுவால் அறிவிக்கப்பட்டார்.

1977 இல் பெலேயின் வலப்பக்க சிறுநீரகம் அகற்றப்பட்டதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 1978 ஆம் ஆண்டு அவருக்கு சர்வதேச அமைதிப்பரிசு வழங்கப்பட்டது.

2017 டிசம்பரில் மொஸ்கோவில் நடைபெற்ற 2018 உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட தெரிவு நிகழ்ச்சியில் பேலே சக்கர இருக்கையில் தோன்றினார். 2019 இல் பேலேவுக்கு சிறுநீரகக்கல் அகற்றலுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு அவ்வப்போது நோய்வாய்ப்பட்டு வந்த பேலே 2022 டிசம்பர் 29 ஆம் திகதி தனது 82-ஆவது அகவையில் பெருங்குடல் புற்றுநோயினால் பல உறுப்பு செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் மரணித்தார்.

பேலே இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் அவர் கால்பந்தாட்டம் விளையாடிய காலமும் காட்சிகளும் கால்பந்தாட்ட இரசிகர்களின் மனங்களில் என்றென்றும் குடிகொண்டு அந்தக் கனவானை முடிசூடா மன்னராவே நிலைத்திருக்கச் செய்யும்.

ஆர்.திருஷான்னோ