ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான கட்டணம் அதிகரிப்பு

கன்சியூலர் அலுவலகத்தில் ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான கட்டணம் அதிகரிப்பு

by Bella Dalima 30-12-2022 | 4:29 PM

Colombo (News 1st) கன்சியூலர் அலுவலகத்தில் ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான கட்டணம் ஜனவரி முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி குறிப்பிட்டு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய, கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்சியூலர் அலுவலகத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் வௌிநாட்டு தூதரகங்களில் காணப்படும் கன்சியூலர் பிரிவுகள் மூலம் மேற்கொள்ளப்படும் சான்றுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் பரீட்சை பெறுபேறுகளை சான்றுப்படுத்துவதற்கான கட்டணம் 800 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது.

வௌிநாட்டு பிரஜைகளுக்காக இலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் எந்தவொரு ஆவணத்திற்குமான கட்டணம் 3000 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி ஆவணத்திற்கான கட்டணமாக 8000 ரூபாவும் ஏனைய இதர ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான கட்டணமாக 1200 ரூபாவும் அறிவிடப்படும் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.