ஏறாவூர் நகரசபை வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையும் தோல்வி; தவிசாளர் இராஜினாமா

by Staff Writer 30-12-2022 | 7:03 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூர் நகரசபையின் எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தவிசாளர் M.S. நளீம் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

ஏறாவூர் நகரசபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தவிசாளர் M.S. நளீமினால் இன்று காலை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில்,  ஆதரவாக 08 உறுப்பினர்களும் எதிராக 09 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதன் மூலம் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வி கண்டது. 

இதனைத் தொடர்ந்து இன்று மாலை சபை மீண்டும் கூடியபோது திருத்தங்களுடன் கூடிய வரவு செலவுத் திட்டம்  சமர்ப்பிக்கப்பட்டது.  

இதன்போது, அதே எண்ணிக்கையில் மீண்டும் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. 

இதனால்,  நகரசபையின் தவிசாளர் M.S. நளீம் தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.