எரிக் சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை - TELO

இனப்பிரச்சினை தொடர்பாக கருத்துக்கூற எரிக் சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை - TELO

by Staff Writer 27-12-2022 | 6:59 PM

Colombo (News 1st) இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித அருகதையும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிக் சொல்ஹெய்ம் நாட்டின் பிரதிநிதியோ அல்லது இராஜதந்திரியோ அல்ல எனவும் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களில் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன? எந்த நாட்டினுடைய பிரதிநிதியாக அவர் செயற்படுகிறார்? யாருடைய தூண்டுதலில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் பற்றி கருத்து கூற முற்படுகிறார்? அல்லது அவர் யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார்? எனவும் அந்த ஊடக அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எரிக் சொல்ஹெய்மின் ஆலோசனையையோ, தலையீட்டையோ, கருத்துகளையோ தமிழ் தலைவர்கள் எவரும் கோரவில்லை எனவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினையை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ள நிலையில் எரிக் சொல்ஹெய்ம் தன்னுடைய உத்தியோகபூர்வமான பணி எதுவோ அதனைச் செவ்வனே செய்யட்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர்​ சுரேந்திரன் குருசுவாமி தமது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.