.webp)
வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாட்டை அண்மித்துள்ளது.
இதன் காரணமாக இன்று(24) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை வேளையில் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
நாளை(25) நாட்டின் அநேகமாக பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.
தாழமுக்கமானது நாளை(25) நாட்டினூடாக நகர்வதால் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் பலத்த காற்றும் வீசும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் வடக்கு, கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இன்றும்(24) நாளையும்(25) கடற்றொழில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் பனிமூட்டம் நிலவுவதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் வீதிகளில் பயணிக்கும் போது மிகவும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.