இன்று(23) முதல் விசேட பொதுப்போக்குவரத்து

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(23) விசேட பொதுப்போக்குவரத்து

by Rajalingam Thrisanno 23-12-2022 | 7:21 PM

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
அனைத்து நகரங்களிலும் பயணிகளின் வசதி கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பிராந்திய மற்றும் சாலை முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச கூறினார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 08 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை 03 விசேட ரயில்களும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை 03 விசேட ரயில்களும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை ஒரு விசேட ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை ஒரு விசேட ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, பிரதான நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளுக்கான திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணை ஜனவரி முதல் வாரத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.

புதிய நேர அட்டவணையை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.