.webp)

மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்யாமல் அரச அதிகாரிகள் என்ற வகையில் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 வீதமானவை அரச அதிகாரிகளால் தீர்த்து வைக்கப்படக் கூடியவையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மாத்திரமன்றி அமைச்சர்களேனும் கொழும்பிலிருந்து வரவேண்டிய அவசியம் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு உச்சபட்ச சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் காணிப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து தயாரிக்கும் அறிக்கையை பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கிடைக்கச் செய்யும்படி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையை சமர்பிக்கத் தவறினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலக முடிவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்காக பட்டிபொல தொடக்கம் பொரலந்த வரை கேபிள் கார் செயற்றிட்டத்தை ஆரம்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நுவரெலியா மக்களின் காணிப் பிரச்சினைக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் மாவட்டத்திலுள்ள அரசுக்கு சொந்தமான காணி தொடர்பில் மாவட்டச் செயலகம், பெருந்தோட்ட அமைச்சு மற்றும் காணி பதிவு திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றைத் தயாரித்து அடுத்த ஒரு மாதத்திற்குள் அதனை சமர்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளுக்குமான அனுமதிப்பத்திரங்களை இரத்துச்செய்து மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இந்த பணிகளை பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
அடுத்த மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்துக்கு முன்னர் மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
