உபவேந்தர் மீதான தாக்குதல்-மாணவர்கள் விளக்கமறியலில்

உபவேந்தர் தாக்கப்பட்ட விவகாரம் - சந்தேகநபர்களான மாணவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Rajalingam Thrisanno 22-12-2022 | 8:19 PM

பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த விதானகேவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பேராதனை பிரதம நீதவான் சேனித் விஜேசேகர இன்று உத்தரவிட்டார்.

குறித்த மாணவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். 

சட்டவிரோதமாக ஒன்றுகூடி தாக்குதல் நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள் 12 பேரும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

முறைபாட்டின் சாட்சியாளர்கள் அந்த 12 பேரையும் அடையாளம் கண்டனர்.

சந்தேகநபர்களான மாணவர்களை எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மாணவர்களை ஏதேனும் பிணை நிபந்தனையின் கீழ் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் இன்று மன்றில் ஆஜரான சட்டத்தரணி அனுர சேனாநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் கோரிக்கை விடுத்தது.

பாதிக்கப்பட்ட பேராசிரியரும் பல்கலைகழகம் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ச்சமிந்த அத்துகோரள உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இந்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு வௌியிட்டது.