அரச வணிக வங்கிகளின் வட்டி வீதம் அதிகரிப்பு

அரச வணிக வங்கிகளின் கடன் வசதிகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 21-12-2022 | 7:25 PM

Colombo (News 1st) அரசுக்கு சொந்தமான வணிக வங்கிகள், இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்(SMS) மூலம் தெரிவிப்பதற்கு அரச வங்கிகள் சில நேற்று(20) நடவடிக்கை எடுத்திருந்தன.

கடன் வசதிகளுக்கான வட்டி 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதான அரச வங்கியான தேசிய சேமிப்பு வங்கி நேற்று(20) வாடிக்கையாளர்களுக்கு SMS ஊடாக அறிவித்ததுடன், இந்த வட்டி அதிகரிப்பு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.

நிலையான வட்டி வீதத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களுக்கே இந்த வட்டி அதிகரிப்பு பொருந்தும் என விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது தெரியவந்தது.

அதற்கமைய, 02 வருடங்களுக்கும் குறைவான நிலையான வட்டி வீதத்தின் கீழ் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி, 03 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிக காலத்திற்கு பெறப்பட்ட கடன் வசதிகளுக்கான வட்டி 15 வீதமாக காணப்படும்.