அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளை தடுத்து வைக்க உத்தரவு

by Staff Writer 20-12-2022 | 10:41 AM

Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மியன்மார் பிரஜைகளுடன் மீட்கப்பட்ட அகதிகள் படகின் படகோட்டி விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்படைத் தளத்தை அண்மித்த தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த மியன்மார் அகதிகளை, மல்லாகம் நீதவான் நேற்று(19) மாலை பார்வையிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, படகிலிருந்து மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளை சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவர்கள் பாதுகாப்பான முறையில் தடுத்து வைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மியன்மாரிலிருந்து சட்டவிரோதமாக பயணித்துக் கொண்டிருந்த படகொன்று வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி கடற்படையினரால் மீட்கப்பட்ட படகில் பயணித்தவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.