.webp)

Colombo (News 1st) 70 வருட காலமாக தீர்க்க முடியாத அரசியல் பிரச்சினையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்ப்பார் என நம்பி கூட்டத்திற்கு சென்று தமிழ் மக்களை மடையனாக்கின்றனரா? என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் தமிழர் பகுதியில் அரசாங்கம் இந்துக் கோயில்கள் இடிப்பு, காணி அபகரிப்புகளை நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கூறுவதற்கான தைரியம் தமிழ் தலைமைகளுக்கு இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிற்கு தமிழர் விடுதலை கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் கட்சித் தலைவர்கள் அல்லாதவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க சமஷ்டியை தீர்வாக வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார், மஹிந்த ராஜபக்ஸ ஒற்றையாட்சியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார் எனவும் வீ.ஆனந்தசங்கரி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது இரா.சம்பந்தன் தலைமையிலான 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை பகிஷ்கரியுங்கள் என பிரசாரம் செய்து ரணிலின் சமஷ்டியை தோற்கடித்து மஹிந்தவின் ஒற்றையாட்சியை வெற்றி பெற வைத்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
