சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்று உயிரிழந்தவரின் பூதவுடல் நல்லடக்கம்

by Staff Writer 19-12-2022 | 6:39 PM

Colombo (News 1st) கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இன்று(19) இடம்பெற்றன. 

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 புகலிடக் கோரிக்கையாளர்கள் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இருவர் தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாமென கூறி கடந்த 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இதனையடுத்து, வியட்னாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்.சாவகச்சேரி, கல்வயல் பகுதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 37 வயதான ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த நபருடைய சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து இன்று(19) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. 

சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.