.webp)
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகள் விற்பனை செய்கின்றமை தொடர்பில் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் 122 பாடசாலைகளில் நேற்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, 2 கிலோ 148 கிராம் மாவா, 9 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 01 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 10 போதைவில்லைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனிடையே, கம்பளையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றினுள் போதைப்பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் காவலாளி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் கஞ்சா பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சிறிதளவு கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாடசாலை காவலாளி மற்றும் மூன்று இளைஞர்கள் இன்று கம்பளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்தது.
முதல் கட்டத்தில் கொழும்பு மாவட்டத்திலுள்ள 200 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டார்.
ஏனைய பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் இதற்கான பயற்சிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
