.webp)

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) மீண்டும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை இன்று சந்தித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் நுகேகொடையிலுள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதனையடுத்து கருத்துக் கூறிய எரிக் சொல்ஹெய்ம், பொருளாதார நெருக்கடிக்கு பசுமையான தீர்வுகளைக் கண்டறிவதற்காகவும் முதலீடுகள், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் உதவுவதற்காகவும் ஐனாதிபதி விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் தான் இலங்கை வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் மலையக மக்களும் ஒரே நாட்டிற்குள், பிரிய முடியாத இலங்கைக்குள் வாழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடும்கும் படி எரிக் சொல்ஹெய்மிடம் கோரிக்கை விடுத்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் போது, விசேட தூதுவராக கடமையாற்றிய எரிக் சொல்ஹெய்ம் நாட்டின் அரசியல் கட்சிகளுடன் மேற்கொண்டுள்ள கலந்துரையாடல்களின் நோக்கம் என்ன?
2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வரையில், அவர் சமாதானம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் தொடர்பான வேலைத்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளராக நியமிக்கப்பட்ட எரிக் சொல்ஹெய்ம், வெளிநாட்டு பயணங்களின் போது செலவிடப்பட்ட நிதி தொடர்பிலான சர்ச்சை காரணமாக 2018 ஆம் ஆண்டு பதவியை இராஜினாமா செய்தார்.
எரிக் சொல்ஹெய்ம் 668 நாட்கள் சுற்றுலாக்களுக்காக 4,88,518 அமெரிக்க டொலர்களை செலவு செய்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்மை நியமித்ததுடன், அவர் ஜனாதிபதியுடன் COP27 மாநாட்டிலும் கலந்துகொண்டிருந்தார்.
வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தியதுடன், இயற்கை நைட்ரஜன் தொடர்பில் எதிர்ப்பார்ப்புடன் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இயற்கை நைட்ரஜன் தொடர்பிலான உற்பத்தி செயன்முறை உரிமை நோர்வே தேசத்திற்கு சொந்தமாக உள்ளது.
இயற்கை நைட்ரஜன் செயற்றிட்டம் தொடர்பில் நோர்வே அரசாங்கம் பாரிய பங்காற்றி வருகின்றது.
நோர்வே நாட்டின் நைட்ரஜன் செயற்றிட்ட பணிப்பாளராக எரிக் சொல்ஹெய்ம் கடமையாற்றி வருகின்றார்.
கடந்த மார்ச் மாதம், அப்போதைய மின்சக்தி எரிசக்தி அமைச்சர், இலங்கையில் இயற்கை நைட்ரஜன் உற்பத்தி தொடர்பான முன்னோடித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இந்திய Greenstat நிறுவனத்துடன் கையெழுத்திட்டிருந்தார்.
இந்தியாவில் இயங்கும் Greenstat நிறுவனமானது நோர்வே மற்றும் இந்தியாவின் கூட்டு நிறுவனமாகும்.
வடக்கு கடற்பிராந்தியத்தில் வடக்கு கடலில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எரிக் சொல்ஹெய்மிற்கும் இந்த திட்டங்களுக்குமான தொடர்பு என்ன ?
இந்த திட்டங்கள் அரசியல் கட்சிகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன?
