பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பு: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 15-12-2022 | 7:59 PM

Colombo (News 1st) அரச நிறுவனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாது, பொதுமக்களுக்கான அதிகபட்ச சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பு என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கான சேவையை வழங்குவதை தவறவிட்டு, எந்தவொரு அரச அதிகாரியும் காரணம் கூறக்கூடாதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட செயலகத்தில் இன்று (15) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான சேவையை வழங்குவதற்காகவே சட்டங்கள் மற்றும் கட்டளைகளை ஏற்று அரச அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும், நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு அல்லவெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.