.webp)
Colombo (News 1st) இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும்.
1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
'அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி' எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த தொனிப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மனித உரிமைகள் பாதுகாப்பு விடயமானது அங்கவீனமடைந்தோர், பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் போன்ற நலிவுற்ற குழுக்களின் மீதும் கவனம் செலுத்துகிறது.
எவ்வாறாயினும், கண்ணியம் மற்றும் உரிமைகளில் சமத்துவம் தேவை எனும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் உறுதிமொழி அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக 2120 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காணாமலாக்கப்பட்ட உறவினர்கள், கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து காந்தி பூங்கா வரை நடைபவனி முன்னெடுத்திருந்தனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.