.webp)

Colombo (News 1st) நாட்டில் நிலவும் குளிருடனான வானிலை படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், தென்மேற்கு பிராந்தியங்களில் குளிருடனான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவான Mandous புயல் தமிழகத்தின் கரையைக் கடந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், புயல் தாக்கத்தினால் இன்றும் நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் இந்த பகுதிகளில் குளிருடனான வானிலை நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று காலை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 8 பாகை செல்சியஸ் வரை குறைவடைந்தது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நேற்று அதிகாலை 20 பாகை செல்சியஸூக்கும் குறைவான வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று 16.4 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், அநுராதபுரத்தில் 18.4 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. நுவரெலியாவில் நேற்று 8.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பலத்த காற்றுடனான மழையினால் இதுவரை 3006 குடும்பங்களை சேர்ந்த 10,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மழையுடனான வானிலையால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பலத்த காற்று காரணமாக 2720 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
