சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள COPE பரிந்துரை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு COPE குழு பரிந்துரை

by Staff Writer 09-12-2022 | 4:36 PM

Colombo (News 1st) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்பான சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு COPE குழு பரிந்துரைத்துள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் அதன் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கைகள் ஆகியன தொடர்பில் COPE குழு நேற்று (08) கூடி ஆராய்ந்தது. 

இதன்போது, உரிய அமைச்சின் செயலாளருக்கு COPE குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதுடன், இது தொடர்பான பூர்வாங்க அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் அடிப்படையில், உப தலைவர் ஒருவர் இருக்க முடியாது எனவும் குறித்த பதவியை வகித்தவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் சட்டப்பூர்வமானது அல்ல எனவும் இதனை அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்க  நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் COPE குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.