வட மாகாண பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

by Bella Dalima 09-12-2022 | 7:49 PM

Colombo (News 1st) ஒழுக்கமான சமூகத்தை சீர்குலைக்கும் பண மோகம் கொண்டவர்களின் பலிகடாக்களாக இன்று இலங்கைவாழ் மக்கள் ஆகியுள்ளனர். 30 வருட யுத்தம் காரணமாக பாரிய அழிவுகளை எதிர்கொண்ட வட மாகாணம் மீண்டெழ முயற்சிக்கும் தறுவாயில் மற்றுமொரு பெரும் யுத்தத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். பண்பாட்டிலும் கலாசாரத்திலும் அன்று முதல் இன்று வரை சிறந்து விளங்கும் வட பகுதி சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலின் துரதிர்ஷ்டவசமான இழப்புகளை சமூகம் இன்று எதிர்கொண்டுள்ளது. சமூகத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக பல முக்கியமான விடயங்களை ஆதாரப்பூர்வமாக ஆராய்ந்து உங்களுக்கு நியூஸ்ஃபெஸ்ட் அறிக்கையிடுகிறது. வட மாகாணத்தில் ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கொக்காவில் பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையொன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றது. வீட்டில் உறவினர்களில் ஒருவர் பயன்படுத்திய  ஐஸ் போதைப்பொருளை இந்த குழந்தை தெரியாமல் உட்கொண்டுள்ளது.  இதன்போது, சுகவீனமடைந்த 2 வயது பெண் குழந்தை தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது. துரதிர்ஷ்டவசமான பல மரணங்களும் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அண்மையில் 14 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக மரண பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது. வடமராச்சியில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த 22 வயதான இரண்டு இளைஞர்களும்  ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தமையும் உறுதியாகியுள்ளது. போதைப்பொருள் பாவனையின் நேரடி தாக்கத்தினால் கடந்த 6 மாதங்களில் 13 இறப்புகள் பதிவாகியிருப்பதாகவும் அநேகமானவர்கள் 20 தொடக்கம் 30 வயதை உடையவர்கள் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  மருத்துவர் T.சத்தியமூர்த்தி தெரிவித்தார். குறைந்த வயதுடைய சிலரும் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களில் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசிகள் மூலம் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்களின் உடலில் அதிகப்படியான கிருமிகள் உட்செல்வதால், அவை இரத்தத்தில் சடுதியாக பெருகி, தொற்றுக்குள்ளாக்கி உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர் T.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார். போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள 20 வயதிற்கு குறைந்த மாணவர்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்து செல்வதாக அவர் மேலும் கூறினார். மன்னார் மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையாகி அடையாளம் காணப்பட்ட 16 வயதிற்கும் குறைந்த மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  தர்மராஜன் விநோதன் குறிப்பிட்டார். கடல் மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் வடக்கிற்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது.