நாட்டில் குளிரான வானிலை; கடும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் மூவர் பலி

நாட்டில் குளிரான வானிலை; கடும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் மூவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2022 | 9:08 pm

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் குளிரான வானிலை நிலவுகின்றது.

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள Mandous சூறாவளி காரணமாக குளிரான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சூறாவளி நாளை (09) காலை புயலாக மாறி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கரையைக் கடக்கக்கூடும் என   எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சில பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மூவர் உயிரிழந்துள்னர். 

உடபுசல்லாவை – கல்கடபத்தன பகுதியில் இன்று காலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.​ இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான ஒருவரே சம்பவத்தில்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உடபுசல்லாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
நுவரெலியா – ராகலையில் முச்சக்கர வண்டியொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதுடன், முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், ராகலையில் பாடசாலை மீது மரம் முறிந்து வீழ்ந்ததில், கட்டடம் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதனிடையே, மாத்தறை தெனியாய – அபரகடஹேன பகுதியில் இன்று காலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 54 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம்  தெனியாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெனியாய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்