இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் 5,978 மில்லியன் ரூபா நட்டம்

by Bella Dalima 07-12-2022 | 8:17 PM

Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டம் நினைவிருக்கிறதா?

இந்த தீர்மானத்தினால் இதுவரையில் நாட்டிற்கு 5978 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த பலனை அடைய முடியவில்லை என குறிப்பிட்டு செப்டம்பர் 21, 2020 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட கடிதத்தை ஆதாரமாகக்  கொண்டு இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

0.1 வட்டி வீதத்துடன் 12 வருட கடன் மீள செலுத்தும் காலம், 40 வருட கடன் மீள செலுத்தும் காலம் எனும் அடிப்படையில் ஜப்பான் வழங்கும் கடன் மூலம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருந்தது. 

சரியான ஆய்வுகள் இன்றி, இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தினால், அதுவரைக்கும் செலவழிக்கப்பட்ட 5978 மில்லியன் ரூபா பணம் அநாவசிய செலவு என கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தொகைக்கு மேலதிகமாக, திட்டத்தின் ஆலோசனை நிறுவனம் கோருகின்ற 5169 மில்லியன் ரூபா தொகையை செலுத்த வேண்டி ஏற்படுமாயின்,  அந்த நட்டத்தையும்  ஏற்கவேண்டி ஏற்படும்.

இழப்பை ஈடு செய்வதாகத் தெரிவித்து, மின் கட்டணத்தை அதிகரித்து, மக்கள் மீது மேலதிக சுமையை ஏற்றுவதற்கு முன்னர்,  எந்த விசாரணையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களால் விரயம் செய்யப்பட்ட பெரும் தொகையினை மீள பெறுவதற்கான வழியினை​ தேட மறந்ததேனோ?