வேலணை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

வேலணை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

by Staff Writer 06-12-2022 | 3:27 PM

Colombo (News 1st) வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 8  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம்  சபையின் தவிசாளர் ந.கருணாகர குருமூர்த்தி தலைமையில் இன்று இடம்பெற்றது.

பலத்த விவாதத்திற்கு பின்னர் தவிசாளர் ந.கருணாகர குருமூர்த்தியால்வாக்கெடுப்பிற்கு கோரப்பட்டபோது, இலங்கை தமிழரசுக் கட்சியின் 8 உறுப்பினர்களும் வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 உறுப்பினர்களும் எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் நடுநிலை வகித்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவருமாக 09 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் இன்றைய கூட்டத்திற்கு வருகை தரவில்லை.

20 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக 8 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக 2 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் சார்பாக தலா ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.