சிறுநீரக கடத்தல்: தரகருக்கு விளக்கமறியல்

சிறுநீரக கடத்தல்: தரகருக்கு விளக்கமறியல், வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வௌிநாட்டு பயணத் தடை

by Bella Dalima 06-12-2022 | 4:38 PM

Colombo (News 1st) பொரளை தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்கேநபர், இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அன்றைய தினம் சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் மேலதிக நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த தனியார் வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி உள்ளிட்ட 6 பணிப்பாளர்களுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வறுமையான குடும்பங்களுக்கு பணம் பெற்றும் தருவதாகக் கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்த பின்னர், பணம் வழங்காமை தொடர்பில் 05 பேரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கொழும்பு  -15, கஜிமாவத்தையை சேர்ந்த 41 வயதான ஒருவர் கைது  செய்யப்பட்டார்.

சிறுநீரகங்களை பணத்திற்காக வழங்கும் நபர்களுக்கும் அதனை பெற்றுக்கொள்ளும் தரப்பினருக்கும் இடையில் தரகராக அந்நபர் செயற்பட்டுள்ளார்.

அவர் தரகுப் பணத்திற்கு மேலதிகமாக சிறுநீரகத்திற்காக வழங்கப்பட்ட பணத்திலும் ஒரு பகுதியை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.