எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக மீனவர்களுக்கு மின்சார மோட்டார் படகுகள் அறிமுகப்படுத்தப்படும்: டக்ளஸ் தேவானந்தா

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக மீனவர்களுக்கு மின்சார மோட்டார் படகுகள் அறிமுகப்படுத்தப்படும்: டக்ளஸ் தேவானந்தா

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக மீனவர்களுக்கு மின்சார மோட்டார் படகுகள் அறிமுகப்படுத்தப்படும்: டக்ளஸ் தேவானந்தா

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2022 | 5:42 pm

Colombo (News 1st) மீனவர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண அடுத்த வருடம் முதல் மின்சார மோட்டார் படகுகள் அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மின்கலங்களை பயன்படுத்தி 100 கிலோமீட்டர் பயணிக்கக்கூடிய மின்சார மோட்டார் படகுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும், இதற்கான செலவு நாளொன்றுக்கு 86 ரூபா எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தெரிவு செய்யப்பட்ட 2500 நன்னீர் நீர்நிலைகளில் அடுத்த வருடம் மீன் குஞ்சுகளை விடுவிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, வட்டவான் இறால் பண்ணை புதிய வருடத்தில் புதுத்தெம்புடன் செயற்படுமென கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அந்ததந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நன்மையடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள இறால் பண்ணையின் செயற்பாடுகளும் அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்தள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

வட்டவான் இறால் பண்ணையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான குழு ஒன்றினை அமைத்துள்ளதுடன், குறித்த குழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் தை மாதத்தில் இருந்து பண்ணையின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளார்.  

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்