சீனாவில் போராட்டங்களை கட்டுப்படுத்திய பொலிஸார்

சீன எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்திய பொலிஸார்

by Chandrasekaram Chandravadani 29-11-2022 | 11:30 AM

Colombo (News 1st) சீனாவில் விதிக்கப்பட்டுள்ள COVID-19 கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது நாளான இன்று(29) பல நகரங்களில் அதிகளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையால் முன்னெடுக்கப்படவிருந்த பல ஒன்றுகூடல்களை நடத்த முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது பொலிஸாரால் மக்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் கையடக்கத்தொலைபேசிகள் சோதனையிடப்பட்டதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பல நகரங்களில் தொடர்ந்தும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் சீனாவின் Urumqi நகரிலுள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குடியிருப்பாளர்களால் தீயிலிருந்து தப்பிக்க முடியாமல் போனதாக பரவலாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உள்ளூர் அதிகாரிகள் மறுத்துள்ளனர். 

இதன் விளைவாக போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்த ஆயிரக்கணக்கான மக்கள், அந்நாட்டு ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.