ஓமானில் இலங்கை பெண்களுக்கு பாலியல் தொல்லை; தூதரக முன்னாள் பணியாளருக்கு விளக்கமறியல்

by Staff Writer 29-11-2022 | 7:52 PM

Colombo (News 1st) ஓமானில் இலங்கை பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ.குஷான் என்பவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ. குஷான் என்பவர் இன்று காலை 3.55 அளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை அடைந்தபோது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

6 மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணை இடம்பெற்றுள்ளது. பின்னர் சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த அதிகாரி ஓமானில் உள்ள இலங்கை தூதுவரின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்றை கையளித்திருந்தார்.  அதில் அவர் சுகவீனமுற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சட்டவைத்திய அதிகாரி ஒருவரிடம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு சொந்தமான பாதுகாப்பு இல்லத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இலங்கை்ககான ஓமான் தூதரகத்தின் ஈ.குஷான் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தூதரகத்தின் முதலாம் இரண்டாம் செயலாளர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.

எனினும், தமது சேவை வழங்குநர் அந்த குற்றச்சாட்டுகளுடன் அல்லது ஆட்கடத்தலுடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த பெண்கள், அங்கிருந்து வௌியேறுவதற்கு உதவிய பெண்ணை மீண்டும் பாதுகாப்பு இல்லத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்தமையினால், அப்பெண் பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனவே, நிபந்தனைகளின் கீழ் பிரதிவாதிக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

எனினும், சந்தேகநபரை கைது செய்வதற்கான விடயங்களை முன்வைத்து பிடியாணை பெற்றுக்கொண்ட பின்னரே அவரை கைது செய்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

பாலியல் தொல்லை மற்றும் சுற்றுலா விசாவின் கீழ் ஓமான் நாட்டிற்கு  பெண்களை அழைத்துச் சென்றமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் சந்தேகநபருக்கு பிணை வழங்கினால் அது விசாரணைகளுக்கு தடையாக அமையும் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியது.

அதன் பிரகாரம், பிரதம நீதவான் பிணை கோரிக்கையை நிராகரித்தார்.

இதேவேளை, ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்ட, அங்கு பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் சிலர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இதேவேளை, ஓமானில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் அண்மையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்த துபாய் சுத்தா எனப்படும் நிசங்க சுதர்சன என்பவர் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு இன்று  அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.