தமிழ் தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது:TULF

இணைப்பாட்சிக்கு இணக்கப்பாடு வெளிப்படுத்தப்படாத வரை தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது: TULF அறிக்கை

by Bella Dalima 29-11-2022 | 5:43 PM

Colombo (News 1st) சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அதிகாரமுள்ள இணைப்பாட்சி அடிப்படையிலான முதற்கட்ட இணக்கப்பாட்டை அரசு வௌிப்படுத்தாத வரை தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணி ( TULF) தெரிவித்துள்ளது. 

சில தமிழ் கட்சிகள் அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாராகி வருவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''பிள்ளை பெற முடியாது என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அரசுடன் தேன் நிலவுக்கு சென்று, வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும்  மக்களையும்  அவமதிக்கும் செயல் தேவைதானா என தமிழர் விடுதலைக் கூட்டணி கேள்வி எழுப்பியுள்ளது. 

சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரும் வலிகளை புரிந்துகொள்ளாத ஒரு பிரிவினரும் வலி சுமந்த தமிழர்கள் சார்பில் தீர்மானங்களை எடுத்து, அதனை அவர்கள் மேல் சுமத்தும் முயற்சிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அதிகாரமுள்ள இணைப்பாட்சி அடிப்படையிலான அரசொன்றை தமிழர்களின் மரபுவழி தாயகத்தில் அமைப்பதற்கான முதற்கட்ட இணக்கப்பாட்டை அரசு வெளிப்படுத்தாத வரை, தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு என தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.