4 இலட்சம் கிலோ பால் மா கொழும்பு துறைமுகத்தில்...

இறக்குமதி செய்யப்பட்ட 4 இலட்சம் கிலோகிராம் பால் மா விடுவிக்கப்படாமல் கொழும்பு துறைமுகத்தில் - பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம்

by Staff Writer 27-11-2022 | 3:09 PM

Colombo (News 1st) நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 04 இலட்சம் கிலோகிராம் பால் மா விடுவிக்கப்படாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அவற்றில் ஒரு இலட்சம் கிலோகிராம் பால் மா காலாவதியாகும் திகதியை அண்மித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்‌ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த பால் மா தொகையை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதில் தாமதம் நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இலங்கை சுங்கத் திணைக்களம் நிராகரித்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனங்கள் அந்நிய செலாவணியை சட்டவிரோதமாக கையாளுகின்றமை குறித்து 02 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

இந்த விசாரணைகளை குழப்பும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பொய்யான தகவல்களை வௌியிடுவதாக அவர் கூறியுள்ளார்.