EPF: திட்டமொன்றை பரிந்துரைக்குமாறு பணிப்புரை

EPF கொடுப்பனவுகள் தொடர்பில் விரைவில் திட்டமொன்றை பரிந்துரைக்குமாறு COPE குழு பணிப்புரை

by Staff Writer 26-11-2022 | 7:27 PM

Colombo (News 1st) நிலுவையில் உள்ள 600 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதிய (EPF)கொடுப்பனவுகளை செலுத்தாமை மற்றும் 300 மில்லியன் ரூபா கடனை அறவிடல் தொடர்பில் விரைவில் திட்டமொன்றை பரிந்துரைக்குமாறு COPE குழு, கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் COPE குழுவிற்கு அறிக்கையிட வேண்டுமென குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 2019 நிதியாண்டு மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் COPE குழு நேற்று கூடியது.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அரச தனியார் கூட்டாண்மையின் கீழ் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் R.M.I.ரத்னாயக்க மற்றும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சதுரங்க உடவத்த உள்ளிட்ட அதிகாரிகளுக்கு COPE குழுவினால் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்ட செய்வதற்காக, கூட்டு முயற்சியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு COPE குழு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பிரதான நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில், கூட்டுத்திட்டமொன்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் COPE குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கூட்டுத்திட்டத்தை செயற்படுத்த நடைமுறை சாத்தியமான மதிப்பீடு ஒன்றைத் தயாரித்து, அதன் அண்ணளவான திட்டத்தை 2023 ஜனவரி 03ஆம் திகதிக்கு முன்னர் COPE குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கடனாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் கடனை வசூலிக்கும் முறை குறித்து 3 வாரங்களுக்குள் COPE குழுவிற்கு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதியறிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்திற்கு தாமதமாக சமர்பிக்கப்பட்டமை பற்றிய யதார்த்தமான மதிப்பீட்டை 2 வாரங்களுக்குள் COPE குழுவிற்கு அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தற்போதைய தலைவர் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டிய COPE குழுவின் தலைவர், இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கில், கூட்டுத்தாபனத்தை ஜனவரி மூன்றாம் வாரத்தில் மீண்டும் அழைக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்