X-Press Pearl: 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

X-Press Pearl தீ விபத்து: 5 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by Bella Dalima 25-11-2022 | 3:24 PM

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் X-Press Pearl கப்பல் தீ விபத்திற்குள்ளானமை தொடர்பில் 5 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

கடந்த வருடம் மே 20 ஆம் திகதி தீ விபத்திற்குள்ளான குறித்த கப்பலின் கெப்டன், குறித்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய பிரதிநிதி உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு  மேல் நீதிமன்றத்தின் பிரதி நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் இன்று  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சமுத்திர மாசுபடுத்தலை தவிர்ப்பதற்கான சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு 8 பிரதிவாதிகளுக்கு எதிராக, 8  குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

எனினும், நீதிமன்றத்தில் இன்றைய தினம் 5 பிரதிவாதிகளே முன்னிலையாகி இருந்தனர்.  நீதிமன்றத்தில் முன்னிலையாகாத 3 பிரதிவாதிகளை எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலையான 5 பிரதிவாதிகளுக்கும் வௌிநாட்டு பயணத்தடை பிறப்பித்த நீதிபதி, அவர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்தார்.