.webp)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா மகளிர் கல்லூரி இரட்டை சாம்பியன் பட்டங்களை சுவீகரித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மகளிருக்கான 20 வயதுக்குட்பட்ட பிரிவில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி அணி இறுதிப் போட்டியில் குருணாகல் மலியதேவ கல்லூரி அணியை எதிர்கொண்டது.
கொழும்பு குதிரைப் பந்தய திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் மகாஜனா அணி 2 கோல்களைப் போட்டது.
அணியின் உபதலைவி கிரிசாந்தினி அந்த 2 கோல்களையும் போட்டு வெற்றிக்கு அடித்தளமிட்டார்.
இரண்டாம் பாதியிலும் அபாரமாக விளையாடிய மகாஜனா அணி சார்பாக கிரிசாந்தினி மேலுமொரு கோலைப் போட்டு வெற்றியை உறுதிசெய்தார்.
மலியதேவ கல்லூரி அணி வீராங்கனைகளால் இறுதிவரை கோலடிக்க முடியவில்லை.
இறுதியில் 3-0 எனும் கோல் கணக்கில் மகாஜனா கல்லூரி அணி வெற்றியீட்டி சாம்பியன் பட்டத்தை சூடியது.
இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கால்பந்தாட்டப் போட்டித் தொடரிலும் மகாஜனா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டது.
களனி பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பொலன்னறுவை பன்டிவெவ மகா வித்தியாலய அணியை 2-0 எனும் கோல் கணக்கில் மகாஜனா கல்லூரி அணி வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதற்கமைய 17 மற்றும் 19 ஆகிய இரண்டு வகையான வயதுப் பிரிவுகளிலும் இவ்வருடம் சாம்பியன் மகுடத்தை சூடிய அணிகளைக் கொண்ட பாடசாலையாக மகாஜனா கல்லூரி திகழ்கின்றது.