8 உயிர்களை காவுகொண்ட குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து; ஒரு வருடம் கடந்தும் தீர்வில்லை

8 உயிர்களை காவுகொண்ட குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து; ஒரு வருடம் கடந்தும் தீர்வில்லை

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2022 | 7:43 pm

Colombo (News 1st) திருகோணமலை – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. 

அனர்த்தம் இடம்பெற்றவுடன் விரைவில் தீர்வுகளை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தது.

எனினும், இதற்கான தீர்வு இன்னும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவித்து கிண்ணியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிண்ணியா ஆண்கள் பாடசாலை ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு பேரணி பாடசாலை வளாகத்தில் இருந்து குறிஞ்சாக்கேணி பாலம் வரை சென்றது.

இதன் பின்னர் குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிண்ணியா பிரதேச செயலாளர் M.H.கனியிடம் கையளித்தனர்.

கிண்ணியாவையும் குறிஞ்சாக்கேணியையும் இணைக்கும் வகையில் 1977 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட  பாலம் 2015 ஆம் ஆண்டளவில் முற்றாக சேதமடைந்தது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவினால்  புதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பாலத்தின் நிர்மாணப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்றமையினால், மக்கள் பாதுகாப்பற்ற படகுப்பாதையை பயன்படுத்த நேரிட்டது. 
 
இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம்  23 ஆம் திகதி இடம்பெற்ற படகுப்பாதை விபத்தில் 8  மாணவர்கள் உயிரிழந்தனர்.

எனினும்,  விபத்து இடம்பெற்று சில நாட்களில்  புதிய பாலத்தின்  நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட​போதிலும் அதன் பின்னர் குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

விபத்தின் பின்னர் கடற்படையினரால் தற்காலிகமாக படகு சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இரண்டு மாதங்களின் பின்னர் அந்த சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பல்லவா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்