.webp)
Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதற்கிணங்க, வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதம் நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து துமிந்த திசாநாயக்க வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாகி எதிர்கட்சியில் அமர்ந்துள்ள பிரியங்கர ஜயரத்ன மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோரும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தற்போது எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதுபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகவில்லை.
இவ்வாறு மொத்தமாக 18 உறுப்பினர்கள் இன்று சபையில் பிரசன்னமாகவில்லை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
தேசிய காங்கிரஸின் A.L.M.அதாவுல்லா வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
முஸ்லிம் கூட்டமைப்பின் உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீமும் வரவு செலவு திட்டத்தை ஆதரித்தார்.
நசீர் அஹமட் வரவு செலவு திட்டத்திற்கு வழமை போன்று ஆதரவாக வாக்களித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபை என்பவற்றின் உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.