ரயில் நேர அட்டவணையில் முழுமையான மாற்றம்

அடுத்த வாரத்திலிருந்து ரயில் நேர அட்டவணையில் முழுமையான மாற்றம் - ரயில்வே திணைக்களம்

by Staff Writer 20-11-2022 | 3:14 PM

Colombo (News 1st) அடுத்த வாரம் முதல் ரயில் சேவைகளின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சேவைகள் இறுதி இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக வேகத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான அட்டவணையின் பிரகாரம் ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அலுவலக ரயில்கள், கொழும்பு கோட்டை மற்றும் ஏனைய இடங்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் அலுவலக ஊழியர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, ரயில்களின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.