முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய 500 ரூபா கட்டணம்

அதிகரிக்கப்பட்ட அளவில் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய 500 ரூபா கட்டணம்

by Staff Writer 19-11-2022 | 5:22 PM

Colombo (News 1st) அதிகரிக்கப்பட்ட அளவில் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு 500 ரூபா கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களுக்காக இந்த கட்டணம் அறவிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். 

சுமார் 25,000 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை முதல் அதிகரிக்கப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை ( 5 லிட்டரில் இருந்து 10 லிட்டராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பணிப்புரை விடுத்தார்.

இதன் முதற்கட்டமாக, மேல் மாகாணத்தில் தொழில்சார்ந்த முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் பணிகள் இம்மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது, இலங்கையில் 10,80,000 முச்சக்கர வண்டிகள் உள்ளன. 

அவற்றில் சுமார் 400,000 முச்சக்கர வண்டிகள் தொழில்முறை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.