ஜனாதிபதியின் அறிவிப்பு தந்திரோபாயமா: EPRLF கேள்வி

ஜனாதிபதியின் அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயமா: EPRLF கேள்வி

by Staff Writer 17-11-2022 | 5:20 PM

Colombo (News 1st) தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஜனாதிபதியின் அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயமா என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மீது சுமைகளை ஏற்றியுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு  ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயமா என்ற சந்தேகம் எழுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் கடன் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச சமூகம் சொல்லும் சில காரியங்களை செய்வது போன்ற ஒரு பாவனையை வெளிக்காட்ட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனாலேயே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசத் தயார் என ஜனாதிபதி கூறுவதாகவும்,  தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி  தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரித்தான முழுமையான அதிகாரங்களைக் கொடுத்து அவர்கள் தமது சொந்த மண்ணில் சுயாட்சியுடன் வாழ்கின்ற சூழல் ஏற்படும் பொழுதே, நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவை முழுமை பெறும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்