G20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

G20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

by Bella Dalima 16-11-2022 | 5:34 PM

Colombo (News 1st) G20 அமைப்பின் தலைமைத்துவம் உத்தியோகபூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பாலி தீவுகளில் நடைபெற்ற G20 நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான மாநாட்டின் நிறைவில் இந்த தலைமைத்துவ மாற்றம் நடைபெற்றுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள G20 நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று (15) ஆரம்பமானது. 

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றார்கள்.

G20 அமைப்பிற்கு தற்போது தலைவராகவிருக்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவினால் (Joko Widodo)இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் உத்தியோகபூர்வமாக தலைமைத்துவம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை  நடைபெற்ற மாநாட்டில் அரச தலைவர்களினால் கூட்டு பிரகடனம் ஒன்று வௌியிடப்பட்டதுடன், ஏனைய ஒத்துழைப்பு விடயங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கும் (Rishi Sunak) சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கும் (Xi Jinping) இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தோ​னேஷியாவில் நடைபெற்ற G20 மாநாட்டிற்கு மத்தியில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், நிகழ்ச்சி அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த சந்திப்பு கைவிடப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.