ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு பிணை

by Staff Writer 15-11-2022 | 12:27 PM

Colombo (News 1st) கைது செய்யப்பட்டிருந்த ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் சந்தன அமரசிங்க இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 14 பெண்களும் ஆண் ஒருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மீது பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் தேசிய பொது வழிகள் சட்டத்தினை மீறியமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9.15 அளவில் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கருவாத்தோட்டம் பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், முற்பகல் 11 மணியளவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, பிரதம நீதவான் B அறிக்கை தொடர்பில் வினவியதுடன், குறித்த B அறிக்கையை சிரேஷ்ட அதிகாரிகள் மீண்டும் கொண்டு சென்றதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதன் பின்னர்,  உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் பிரகாரம் B அறிக்கை புதிதாக தயாரிக்கப்பட்டு, செய்யாத தவறுகளையும் உள்ளடக்குவதற்கு இடமுள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டினர்.

பின்னர் பொலிஸார் B அறிக்கையை சமர்ப்பித்ததுடன் , பொலிஸார் சார்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா விடயங்களை முன்வைத்தார்.

இவர்கள் ஒன்றுகூடுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் இதன்போது தெரிவித்ததுடன், ஜனாதிபதி இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு குறித்த குழுவினர் அனுமதியின்றி பிரவேசித்ததாக சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு என்பதால், வீதித் தடைகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் மன்றில் கூறினார்.

வீதி நாடகக் குழு இராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடைக்கு இணையான ஆடைகள் மற்றும் தொப்பிகளை அணிந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

10 சந்தேகநபர்களை கைது செய்து கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதன் பின்னர் ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமர்ந்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால், அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் பெண்கள் எதிர்நோக்கும் நிலைமைகளை காண்பிக்க வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதே தவிர வேறு காரணங்களுக்காக அல்லவென சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.