மலையகத்தில் போக்குவரத்திற்கு இடையூறு

மண்சரிவு மற்றும் பாறைகள் வீழ்ந்ததால் மலையகத்தில் போக்குவரத்திற்கு இடையூறு

by Staff Writer 14-11-2022 | 12:49 PM

Colombo(News 1st) எல்ல - வெல்லவாய வீதியில் 12 ஆம் கட்டை பகுதியில் கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து வீதியில் வீழ்ந்துள்ள கற்பாறைகள் மற்றும் மண்மேட்டை அகற்ற  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பசறை - லுணுகல பிரதான வீதியில் 156 ஆவது மைல்கல் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் பசறை - லுணுகல பிரதான வீதியூடனான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மண்மேட்டை அகற்றும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் இன்று(14) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென், சபரகமுவ, ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கையாக செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.