கிராமமொன்றின் தாகத்தை தணிக்க முன்வந்த கொழும்பு பாடசாலையொன்றின் மாணவர்கள்

by Staff Writer 13-11-2022 | 7:21 PM

Colombo (News 1st) கொழும்பிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களால் கருவலகஸ்வெவயில் உள்ள கிராமப்புற மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கான திட்டத்திற்கு இன்று(13) அடித்தளமிடப்பட்டது.

மஹகரம்பேவ கிராமம், புத்தளம் மாவட்டத்தின் கருவெலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அழகிய கிராமமாகும்.

இந்த கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டிற்கு அரிசி வழங்க இவர்கள் சிரமப்படுகின்ற போதிலும், இவர்களுக்கான சுத்தமான குடிநீர் இல்லை.

கிராமத்தில் சுத்தமான குடிநீர் இன்மையினால் இங்குள்ள பலர் நீண்ட கால நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் சிறிதளவு வருமானத்தையும் குடிநீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்காக செலவிட வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரோஹித ரொட்ரிகோவின் வழிகாட்டலில் கல்லூரி மாணவர்களால் சிறிது சிறிதாக சேமிக்கப்பட்ட நிதியே மஹகரம்பேவ மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கான வேலைத்திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்படும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பானது, மஹகரம்பேவ கிராமத்திலும் அதனை அண்மித்த கிராமங்களிலும் வாழும் பலரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையவுள்ளது. 

இன்றைய நிகழ்வில் கம்மெத்த தலைவர் ஷெவான் டானியல், நியூஸ்பெஸ்ட் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான யசரத் கமல்சிறி, பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரோஹித ரொட்ரிகோ, லெப்டினன் கமாண்டர் அசங்க நவரத்ன, கருவலகஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ அலவத்த, புத்தளம் மாவட்ட செயலாளர் H.M.S.P.ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.