சூரியவெவயில் படகு விபத்து: 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிப்பு, இருவரை காணவில்லை

by Bella Dalima 12-11-2022 | 6:53 PM

Colombo (News 1st) சூரியவெவ, மஹாவெலி கடார குளத்தில் இன்று (12) காலை படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இதன்போது, மூவர் காணாமற்போயிருந்தனர். அவர்களில் 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

17 மற்றும் 18 வயதான மேலும் இரண்டு சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மீன்பிடி படகில் 08 மாத குழந்தை உட்பட 08 பேர் பயணித்துள்ளனர்.

குறித்த குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குருநாகல் - பிகிம்புவ பகுதியிலிருந்து சூரியவெவிலுள்ள உறவினர் வீட்டிற்கு அன்னதானம் வழங்கும்  நிகழ்விற்காக  சென்றிருந்த  8 பேர் இன்று முற்பகல் 10 மணியளவில் தோணியில் ஏறி குளத்தின் மத்திய பகுதிக்கு சென்றிருந்தனர். 

சூரியவெவ பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர்  படகை செலுத்தியுள்ள நிலையில், படகு கவிழ்ந்துள்ளது. 

சூரியவெவ பொலிஸின் உயிர்காப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.