MT Heroic Idun கப்பல் நைஜீரியாவிடம் ஒப்படைப்பு

ஈக்குவடோரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கை கடற்படையினர் அடங்கிய கப்பல் நைஜீரியாவிடம் ஒப்படைப்பு

by Bella Dalima 12-11-2022 | 4:58 PM

Colombo (News 1st) ஈக்குவடோரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்படை உறுப்பினர்கள் 8 பேர் அடங்கிய MT Heroic Idun கப்பல் நைஜீரியாவிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.

MT Heroic Idun எனும்  எண்ணெய் கப்பல் நோர்வே நாட்டுக் கொடியுடன் பயணிக்கும் கப்பலாகும்.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நைஜீரியாவிற்கு சென்று மீண்டும் திரும்பிய போது, கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த கப்பல் ஈக்குவடோரில் தடுத்து வைக்கப்பட்டது. 

இலங்கையை சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 26 பேரை கைது செய்து ஈக்குவடோரில் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்திருந்ததாக குறித்த கப்பலில் உள்ள அஷான் நிமேத நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். தற்போது அந்த கப்பல் நைஜீரியாவை நோக்கி பயணிப்பதாகவும் அவர் கூறினார்.

MT Heroic Idun கப்பலில் தொழில்புரியும் 26 பேரும் நைஜீரிய எண்ணெய் கடத்தலுடன் தொடர்புபட்டதாக சந்தேகித்து  தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரிய அரசாங்கத்தின் முறைப்பாட்டிற்கு அமைய ஈக்குவடோரில் கினியா கடற்படை இவர்களை சர்வதேச கடற்பரப்பில் கைது செய்தது.

கப்பல் குழுவில் 8 இலங்கை கடற்படை உறுப்பினர்களும் 6 இந்திய கடற்படையினரும் போலந்து, பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் அடங்குகின்றனர்.  

இவர்கள் ஈக்குவடோரின் கினி (Guinea) இராச்சியத்தின் லுபா துறைமுகத்தில் (Luba Port) தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மசகு எண்ணெய் கடத்தல் தொடர்பில் எக்குவடோரில் கினி படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பல் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படுவதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.