நிதி மோசடியில் ஈடுபட்ட நால்வர் யாழில் கைது

நிதி மோசடியில் ஈடுபட்ட நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது

by Staff Writer 11-11-2022 | 4:29 PM

Colombo (News 1st) நிதி மோசடியில் ஈடுபட்ட நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக பொலிஸாரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ரூபாவை டொலர்களில் மாற்றித் தருவதாகவும் வாகன உதிரிப் பாகங்களை குறைந்த விலையில் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்து சந்தேகநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் பணத்தை குறிப்பிட்டதொரு இடத்திற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது. 

யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் யாழ்ப்பாணத்தில் டொலர் பெற்றுத்தருவதாகக் கூறி ஒருவரிடம் 25 இலட்சம் ரூபா பணமும் மற்றுமொருவரிடம் 18 இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

காலி பகுதியிலும் டொலர் பெற்றுத் தருவதாகக் கூறி 10,80,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, தலவாக்கலை, அனுராதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 33, 34, 50 மற்றும் 53 வயதான நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 825 அமெரிக்க டொலரும் 28 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்