ராமர் பாலம்: மனுவிற்கு பதிலளிக்குமாறு உத்தரவு

சுப்பிரமணியன் சுவாமியின் ராமர் பாலம் தொடர்பான மனுவிற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு

by Bella Dalima 11-11-2022 | 6:03 PM

India: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குறித்த மனுவிற்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கும் 2 வாரங்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் சுப்ரமணியன் சுவாமியின் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் குழாம் விசாரித்தது. 

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முடியுமா, இல்லையா என்ற கேள்விக்கு எளிமையான பதில் தேவை எனவும்  8 வருடங்களாக இதற்கு பதிலளிக்கப்படவில்லை  எனவும் வாதிட்டார். 

மத்திய அரசின்  சார்பில் ஆஜராக வேண்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வௌிநாடு சென்றிருப்பதாலும் தாக்கல் செய்யப்படவுள்ள பதில் மனு தொடர்பில் அமைச்சின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதாலும் விசாரணையை தள்ளிவைக்க மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் குறித்த மனுவிற்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கும் 2 வாரங்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டது.