இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

T20 உலகக்கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

by Bella Dalima 10-11-2022 | 4:42 PM

Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து பந்து வீச்சை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. 

இந்திய அணியின் ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. முதல் பந்தில் K.L.ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து, விராட் கோலி - ரோஹித் சர்மா ஜோடி சற்று நிதானமாக ஆடியது. பவர் பிளேயில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.  

ரோஹித் சர்மா 28 பந்துகளில் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

அடுத்ததாக விராட் கோலி - பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரசை்சதம் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பாண்ட்யா 29 பந்தில் அரைச்சதம் அடித்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்தது. 

169 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு இங்கிலாந்து களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ் (Alex Hales)  - ஜோஸ் பட்லர் (Jos Buttler) ஜோடி அதிரடியாக விளையாடியது. 

4 ஓவர் மீதமிருந்த நிலையில், இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 13 ஆம் திகதி நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது.

அலெக்ஸ் ஹேல்ஸ் (Alex Hales) அதிகூடிய 86 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். 

ஜோஸ் பட்லர் (Jos Buttler) 80 ஓட்டங்களைக் குவித்தார்.