முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவு

வசந்த முதலிகேவை நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 10-11-2022 | 2:23 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் உடனடியாக ஆஜர்ப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடமும் வசந்த முதலிகேவை முன்னிலைப்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

​வசந்த முதலிகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் முன்னிலையில் இன்று(10) இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வசந்த முதலிகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று(10) மன்றில் முன்னிலையாகியிருந்தார்.